Cough Syrup | அக்.3 - ம.பி., மருந்துக் கட்டுப்பாட்டு துறைக்கு மின்னஞ்சல் மூலம் அலர்ட்-தமிழ்நாடு அரசு
ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பல குழந்தைள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்து குறித்து அக்டோபர் 3ம் தேதியே மின்னஞ்சல் மூலமாக அலர்ட் செய்ததாக தமிழ்நாடு அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், மத்திய பிரதேசத்தில் செப்டம்பர் 4ம் தேதி முதல் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை 48 மணிநேரத்தில் துரித நடவடிக்கை எடுத்து, சர்ச்சைக்குரிய மருந்தை அக்டோபர் ஒன்றாம் தேதி ஆய்வு செய்து தமிழ்நாட்டில் அவற்றை விற்க தடை விதித்ததாகவும் இதுகுறித்து மத்தியப் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும், அக்டோபர் 3ம் தேதி மின்னஞ்சல் மூலமாக மேல் நடவடிக்கைக்காக தகவல் அனுப்பப் பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு போலீஸின் உதவியுடன் மத்தியப் பிரதேச சிறப்பு புலனாய்வு பிரிவினர் அக்டோபர் 9ம் தேதி சென்னை அசோக் நகர் பகுதியில் அந்நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை கைது செய்ததாகவும் கடந்த ஆண்டே இதுகுறித்து உரிய ஆய்வு செய்யத் தவறியதாக, காஞ்சிபுரம் முதுநிலை மருந்து ஆய்வாளர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழ்நாட்டில் உள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீதும் விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.
