

ருத்ர தாண்டவம் ஆடி, உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தமிழ்நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கண்ணுக்கு தெரியாத கிருமியிடம் இருந்து மக்களை காப்பாற்ற 24 மணி நேரமும் மருத்துவர்கள் , செவிலியர்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த பணியில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பாண்டித்துரை என்பவர் , சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள அரசினர் புறநகர் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா பாதித்த நோயாளிகளை தான் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தகவலை பாண்டித்துரை, தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.
தகவலை கேட்டதும் பதற்றமடைந்த பெற்றோர் , பாண்டித்துரையை வேலையை ராஜினாமா செய்து விடு உயிர் தான் முக்கியம், பிச்சை எடுத்தாவது உன்னை காப்பாற்றுகிறோம் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். அந்த ஆடியோ சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போல் பரவியது...
இதற்கிடையே, தனது குடும்பத்தினரின் வேண்டுகோளை நிராகரித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாண்டித்துரையை நமது தந்தி டி.வி,. தொடர்பு கொண்டு கேட்டபோது, தனக்கு சிறப்பு ஊதியம் வேண்டாம் எனவும் பணி நிரந்தரம் செய்தால் போதும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
நாட்டுக்காக சேவை செய்யும் ராணுவ வீரனை எப்படி நினைப்பீர்களோ அது போல் தன்னை நினையுங்கள் என கூறி பெற்றோரை சமாதானம் செய்து உள்ளார் பாண்டித்துரை.. 108 ஆம்புலனஸ் ஓட்டுனர் பாண்டித்துரையின் தன்னலமற்ற இந்த பொது சேவையை மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் உள்பட ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்..