சமூக வலை தளத்தை கலக்கிய சமையல் மகாராணி 107 வயதில் உயிரிழந்து விட்டார்...

மஸ்தானம்மா உயிரிழந்து விட்டார்.. அவருக்கு வயது 107... சமூக வலை தளங்களை அவர் கலக்கியதன் பின்னணியை பதிவு செய்கிறது.
சமூக வலை தளத்தை கலக்கிய சமையல் மகாராணி 107 வயதில் உயிரிழந்து விட்டார்...
Published on

* ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 106 வயது மூதாட்டி மஸ்தானம்மா. இவர் தள்ளாத வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தமது தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்கிறார். வீட்டு வேலைகளை சுறுசுறுப்புடன் செய்வதோடு, ஒவ்வொரு நாளும் வித விதமான உணவுகளை சமைத்து அசத்துகிறார். இவருடைய கைப்பக்குவம் வீட்டினரை மட்டுமல்ல, இணையதள சமையல் பிரியர்களையும் அடிமையாக்கியுள்ளது.

* தமது சமையல் கைப்பக்குவத்தை செய்முறையுடன் வீடியோவாக, சமூக வலை தளத்தில், உலவ விட்டிருக்கிறார் இந்த சமையல் மகா ராணி. இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர், மஸ்தானம்மாவின் சமையல் வீடியோ பதிவுகளை பின் தொடர்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... வீடியோ பதிவைப் பார்த்தாலோ, நாவில் நீர் ஊறுகிறதே...

* பாரம்பரிய உணவுகள், மீன் வறுவல் முதல் சிக்கன் பிரியாணி வரை மஸ்தானம்மாவின் கை வண்ணத்தில், சமூக வலை தளமே, கமகமக்கிறது. இந்த பாட்டி சமூக வலை தளத்திற்கு வந்ததே, தனிக் கதை தான்...

* இவரது பேரன் லட்சுமணன் தான், தற்போது, பாட்டி மஸ்தானம்மாவின் கை வண்ணத்தில் தயாரான சமையல் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

* ஒருநாள், தமது நண்பர்களுடன் சேர்ந்து, பாட்டி சமைத்ததை, லட்சுமணன் தற்செயலாக வீடியோ பதிவு செய்து பதிவிட்டிருக்கிறார். அது, வைரலாக இணையத்தில் பரவியுள்ளது. அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும், சிறுவயது முதலிலேயே தமது பாட்டி அற்புதமாக சமைத்து வருவது நினைவுக்கு வந்திருக்கிறது. பிறகென்ன... உடனே பாட்டி சமைப்பதை வீடியோ எடுத்து செய்முறையுடன் பதிவிட தொடங்கிவிட்டார்.

* ஆரம்பத்தில் தமது பேரன், தாம் சமைப்பதை படம் பிடித்து என்ன செய்கிறான் என புரியாமல் குழம்பி போயிருக்கிறார் பாட்டி. விவரம் தெரிந்த பிறகு பேரனுடைய செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, அசத்தி வருகிறார்.

* மஸ்தானம்மா, சமீபத்தில் தமது 106-வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அதையும், வீடியோவாக இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். அதில் தமது சமையல் ஆர்வம் பற்றியும், தமது குடும்பம் மற்றும் நண்பர்கள் மீதான பாசம் பற்றியும், பாட்டி விவரித்துள்ளார்.

* மஸ்தானம்மா மீன் வகைகள் மற்றும் பிற கடல்வாழ் உணவுகளை ருசியாக சமைப்பதில் கைதேர்ந்தவர். அவரது சமையல் பக்குவத்தை ஊர் மக்களும் ருசித்து மகிழ்கிறார்கள். ஊர் மக்கள் இவரது கைப்பக்குவத்திற்கு அடிமையாகிவிட்டார்கள்.

* உலகின் மிக மூத்த சமூக வலைதள நட்சத்திரமாக மஸ்தானம்மா உருவெடுத்துள்ளார். பழங்காலத்திய முறைகளில் ருசியான உணவு சமைக்கும் முறைகளை தமது பேரன், பேத்திகளின் கோரிக்கையை ஏற்று கற்றுத் தருகிறார். பாட்டியின் சமையலுக்கு உலகில் லட்சக்கணக்கானோர் ரசிகராகிவிட்டனர்.

* கிரேனி-ஜி என வட இந்தியர்களாலும், கிரேனி என உலக சாப்பாட்டுப் பிரியர்களாலும் அழைக்கப்படும் மஸ்தானம்மாவின் வீடியோக்கள், வைரலாகப் பரவி வருகிறது.

* 106 வயதிலும் அசராமல் சமைத்து அசத்தும் மூதாட்டி மஸ்தானம்மா, தர்பூசணியின் கூட்டில் சிக்கன் செய்வது, மீன், நண்டு, காய்கறி முதல் பிரெட் ஆம்லெட் வரை செய்து அசத்துகிறார்.

* சைவ சாப்பாட்டிலும் தமது திறமையை நிரூபித்துவிட்டார் இந்த மூதாட்டி. தேவையான சமையல் பொருட்களை கைகளால் இடித்து, மசாலா ஆக்கித் தான் பயன்படுத்துகிறார். விறகு அடுப்பைத் தான் உபயோகிக்கிறார். பெரும்பாலும், மண் பானைகள் தான் இவரது கைப்பக்குவத்தில் உணவுகளைத் தயாரிக்கின்றன. இவை தான் பாட்டியின் தயாரிப்புகளுக்கு மகுடம் சூட்டுகின்றன.

* யாருடைய உதவியும் இவருக்குத் தேவைப்படுவதில்லை. நன்றாக இருக்கிறது என்று சொன்னாலே போதும்... பொக்கை வாய் தெரிய சிரிக்கிறார் இந்த பாட்டி.

* மூதாட்டி மஸ்தானம்மாவின் கைப்பக்குவத்தை வீடியோக்களில் பார்த்த உடனேயே வயிறு நிறைந்து விடுகிறது. வயிற்றை குளிர்விக்கும் மூதாட்டியை சிரம் தாழ்த்தி வணங்கலாமே...

X

Thanthi TV
www.thanthitv.com