அமெரிக்காவில் உணவு பரிமாறிய பெண்ணிடம் சாதியை கேட்டதாக எழுந்த சர்ச்சை
அமெரிக்காவில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பிரபல பேச்சாளர் ராஜா, தனக்கு உணவு பரிமாறிய பெண்ணிடம் சாதி குறித்து விசாரித்ததாக எழுந்துள்ள சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற தமிழ் சங்க விழாவிற்காகப் பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் சென்றிருந்தனர். அங்கு அவர்களுக்கு உணவு சமைத்து வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த கார்த்திகேயன் என்பவரின் தங்கை, தனது அனுபவத்தை வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து கார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவில், தனது தங்கை மிகுந்த ஆர்வத்துடன் உணவு சமைத்துச் சென்றதாகவும், அப்போது ராஜா அங்கிருந்தவர்களிடம் ஊர் பெயர்களைக் கேட்டு அவர்களின் சாதியை ஊகிக்க முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, காரைக்குடி என்று பதில் அளித்த தனது தங்கையிடம், "நீங்கள் செட்டியாரா?" என்று கேட்டதுடன் நில்லாமல், அவர் அமைதியாக இருந்தபோதும் "நீங்கள் வேறு என்ன ஆட்கள்?" என்று மீண்டும் மீண்டும் துருவித் துருவி விசாரித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சாதிய அடையாளங்களைக் கடந்து வாழ்வதற்காக வெளிநாடு சென்ற இடத்தில், தமிழகத்திலிருந்து வந்த ஒரு புகழ்பெற்ற பேச்சாளர் இத்தகைய செயலில் ஈடுபட்டது தனது தங்கையை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியதாகவும், அவர் கண்ணீர் விட்டு அழுததாகவும் கார்த்திகேயன் அந்தப் பதிவில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்
