"சென்னை ராயபுரத்தில் 3 மாதங்களுக்கு மேலாக தொடர் மின்தடை" - சாலை மறியலில் இறங்கிய பொதுமக்கள்
சென்னை ராயபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட ஜீவரத்தினம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நாளொன்றுக்கு 5 முதல் 6 முறை தினமும் மின் தடை ஏற்படுவதாகவும், மின் இணைப்பு பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரியத்திடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர். இதனை கண்டித்து எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் பேச்சுவாரத்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
