

இந்தியா, சீனா இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் ஏற்கனவே பல்வேறு இடங்களில் சந்தித்துள்ள நிலையில், சென்னையை அடுத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரான மாமல்லபுரத்தில் மீண்டும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை பகல் 2 மணி அளவில் சீன அதிபர் ஜி ஜின்பிங், சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து, கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஜி ஜின்பிங்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலைய வரவேற்புக்கு பிறகு, பிரத்யேக காரான 'ஹாங்கி 5 எல்' ரக காரில், கிண்டியில் உள்ள ஓட்டலுக்கு ஜி ஜின் பிங் புறப்பட்டுச் சென்றார். வழி நெடுகிலும் பள்ளி மாணவிகள் மற்றும் சென்னையில் வாழும் சீனர்கள் அவரை வரவேற்றனர். சென்னை ஓட்டலில் சுமார் 2 மணி நேரம் ஓய்வெடுத்த ஜின்பிங், மாலை 4 மணி அளவில், சாலை மார்க்கமாக மாமல்லபுரம் சென்றார்.