

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று, ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர், ஊழியர் உள்ளிட்டோர் பணத்துடன் காரில் சென்றுள்ளனர். அப்போது, வேளச்சேரியை சேர்ந்த அம்புரோஸ் என்பவர் காரை இயக்கியுள்ளார். வேளச்சேரி விஜயநகரில் உள்ள விஜயா வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக மேலாளர், ஊழியர், பாதுகாவலர் ஆகியோர் இறங்கிச் சென்றுள்ளனர். அப்போது, லாரிக்கு வழிவிடுவதாக கூறி வண்டியை எடுத்த ஓட்டுநர் அம்புரோஸ், 52 லட்சம் ரூபாய் பணத்துடன் மாயமானார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் மூவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, வேளச்சேரி முகவரியில் ஓட்டுநர் இல்லாதது தெரியவந்தது. வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்ப வந்தபோது நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.