திருடப் போன இடத்தில் மகன் பெயரை எழுதி வைத்த திருடன் -போலீசாரிடம் சிக்கிய புது கொள்ளையர்கள்

திருடச் சென்ற இடத்தில் மதுபோதையில் கொள்ளையர்கள் செய்துவிட்டு வந்த செயலே அவர்களை இன்று கம்பி எண்ண வைத்திருக்கிறது.
திருடப் போன இடத்தில் மகன் பெயரை எழுதி வைத்த திருடன் -போலீசாரிடம் சிக்கிய புது கொள்ளையர்கள்
Published on

சென்னை சோழிங்கநல்லூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் செளந்தராஜன். தனியார் பள்ளியின் ஆசிரியரான இவர், சொந்த ஊரான ஆரணிக்கு சென்ற நிலையில் சென்னையில் உள்ள இவரின் வீட்டு கதவு உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்படவே அவரும் உடனே சென்னைக்கு விரைந்து வந்தார்.

வீட்டில் இருந்த 24 இன்ச் எல்இடி டிவி, லேப்டாப், 2 கிராம் தங்க நகை மற்றும் டூவீலர் என எல்லாவற்றையும் துடைத்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சிலிண்டரையும் விட்டுவைக்கவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதில், செளந்தரராஜனின் வீட்டு சுவற்றில் விஷ்ணு என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. மேலும் ஒரு கால் செருப்பும் கிடந்ததை தொடர்ந்து போலீசார் அதனை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த சூழலில் தான் செம்மஞ்சேரி பகுதியில் வாகன சோதனையின் போது விநாயகர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆக்டிவா பைக் ஒன்றை ஒருவர் ஓட்டி வந்துள்ளார். அவரை பிடித்த போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகம் வலுத்துள்ளது.

வாகனத்தின் சேஸிங் நம்பரை வைத்து விசாரித்த போது அது ஓட்டி வந்தவருக்கு சொந்தமான பைக் இல்லை என உறுதியானது. வண்டியில் ஒட்டப்பட்டிருந்த சிலுவை ஸ்டிக்கர் மீது விநாயகர் ஸ்டிக்கரை ஒட்டி வைத்தது உறுதியானதால் புகார் அளித்த செளந்தரராஜனிடம் போலீசார் வரவழைத்தனர். அப்போது தன்னுடைய வாகனம் தான் இது என அவர் கூறியிருக்கிறார்.

வாகனத்தை ஓட்டி வந்த மதன் என்பவரை பிடித்து விசாரித்த போது தான் அவர் செளந்தரராஜன் வீட்டில் கைவரிசை காட்டியதும் உறுதியானது. குடிப்பதற்கு பணம் இல்லாமல் சுற்றி வந்த மதன், தன் நண்பர் ராகுல் என்பவருடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக செளந்தரராஜன் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற அவர்கள், வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் வழித்து எடுத்து சென்றனர். அப்போது போதையின் உச்சத்தில் இருந்த மதன், தன் மகன் விஷ்ணுவின் பெயரை திருடப்போன வீட்டுச்சுவற்றில் ஆசையாக எழுதி பார்த்துள்ளார்.

மேலும் காலில் போட்டிருந்த ஒரு செருப்பு திருடச் சென்ற இடத்தில் விழுந்ததும், ஒற்றைக் கால் செருப்புடன் தன் வீட்டுக்கு வந்ததும் தெரியாத அளவுக்கு போதையில் இருந்துள்ளார் மதன். கடைசியில் அவர்கள் திருட்டு தொழிலுக்கு புதியவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் அளித்த தகவல் அனைத்தையும் கேட்டு சிரித்த போலீசார், கொள்ளையடித்த அனைத்து பொருட்களையும் கைப்பற்றினர். பின்னர் மதன், ராகுல் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

ரத்தமும் சதையுமாக பல கொள்ளை சம்பவங்கள் நடக்கும் சூழலில் மது போதையில் ஜாலியாக கொள்ளையடித்து விட்டு சிக்கிய இந்த சம்பவம் கிட்டத்தட்ட சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை போலவே அரங்கேறியிருக்கிறது..

X

Thanthi TV
www.thanthitv.com