வீட்டில் உள்ளவர்களை கட்டிப் போட்டு கொள்ளை - 8 பேர் கொண்ட திருட்டு கும்பல் கைது
மதுராந்தகம் அருகே வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு 12 சவரன் நகையை கொள்ளையடித்த 8 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள கடமலைபுத்தூரை சேர்ந்தவர் ஜெகநாதன். தனது வீட்டுக்குள் புகுந்து அணைவரையும் கட்டிப்போட்டு, ரொக்கப்பணம், தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றதாக அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் ஜெகநாதன் புகார் அளித்தார். இதன்பேரில் தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், வாகன சோதனையில் பிடிபட்ட 8 பேரையும் விசாரித்ததில், ஜெகநாதன் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். இவர்கள் மீது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 12 சவரன் நகை, 250 கிராம் வெள்ளி, 10 செல்போன்கள், இருசக்கர வாகனம், கார் மற்றும் பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
