

சென்னையில், மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்து வந்த நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அண்மையில், கொருக்குப்பேட்டை பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில், குழந்தை ஒருவன் உயிரிழந்தான். இதைத் தொடர்ந்து, எடுக்கப்பட்ட நடவடிக்கையில், 17 பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலை அடுத்து மாஞ்சா நூல் தயாரித்த வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த ஞானசேகரனை கைது செய்த போலீசாரின் விசாரணையில், மீஞ்சூர், அத்திப்பட்டு பகுதிகளில் மாஞ்சா விற்பனையை நடத்தியது தெரியவந்தது. அவரிடம் 5 கிலோ கண்ணாடித் தூள், நூல் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மாஞ்சா நூல் விற்பனையை தடுக்க ஆன்லைன் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.