21 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.. நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் விபரீதம்...
4 வருஷமா நீட் தேர்வுக்கு தயாராகிட்டு இருந்த இளம்பெண் திடீர்னு தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்து போயிருக்காங்க... தேர்வு பயம் மாணவியின் உயிர் குடித்ததா?
நீட் என்ற வார்த்தையை கேட்டதும் முதலில் நம் நினைவிற்கு வரும் பெயர் அனிதா....
12 ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவம் படிக்கமுடியாமல் போன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூட்டைத்தூக்கும் தொழிலாளியின் மகளான அனிதாவை தொடர்ந்து பல மாணவர்களின் எதிர்காலத்தை நீட் நிர்மூலமாக்கியது உலகம் அறிந்து உண்மை தான்.
மருத்துவக்கனவோடு 12 ஆண்டுகள் அயராது உழைக்கும் பிஞ்சுகளை காவு வாங்கும் நீட் தேர்வின் வெறி இன்றும் அடங்கவில்லை என்பதற்கு சான்று தான், குரோம்பேட்டை மருத்துவமனையிலிருந்து ஸ்டச்சரில் எடுத்துச்செல்லப்படும் இந்த இளம்பெண்ணின் சடலம்.
வெள்ளை அங்கி அணிந்து ஸ்டெத்தஸ்கோப் ( stethoscope ) மாட்டிக்கொண்டு டாக்டராக வரவேண்டிய பெண், இன்று வெள்ளை துணியால் சுற்றப்பட்டு சடலமாக ஆம்புலென்சில் ஏற்றப்பட்டிருக்கிறார்.
சைக்கிள் மிதித்து கடைகடையாக சென்று சமோசா விற்று மகளை படிக்க வைத்த தந்தையின் உழைப்பு இன்று பஸ்மானது...
மெட்ரிக் கல்வி.... தனியார் கோச்சிங்,... கட்டுகட்டாய் பணம்... இருந்த போதும் பல பிள்ளைகளை மரணத்தின் பிடியில் தான் நீட் வைத்திருக்கிறதா ? என்கிற கேள்வி மேலும் வலுவடைந்து கொண்டே செல்கிறது....
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் நீட் மூலம் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
தேசிய தேர்வுகள் முகமை சார்பில் தான் ஆண்டுதோறும் இந்த நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 4-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
இதற்கு மாணவர்கள் பலரும் விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றனர். அப்படி அனுப்பிய ஒரு மாணவி தான் தேவதர்ஷினி... 21 வயதான இவர் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர். இவரது பெற்றோர் செல்வராஜ் - தேவி தம்பதி.
செல்வராஜ் பேக்கரி நடத்தி வருகிறார்... சமோசா தயாரித்து கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், வண்டலூர் என சுற்று வட்டார கடைகளுக்கு சைக்கிளில் சென்று விற்பனை செய்வது வழக்கம்...
செல்வராஜிக்கு இரண்டு மகள்.. அதில் மூத்த மகள் தான் தேவதர்ஷினி.
12 ஆம் வகுப்பு முடித்து 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் எந்த கல்லூரியிலும் சேரவில்லை...
காரணம் மருத்துவக்கனவு...
தேவதர்ஷினிக்கு சிறுவயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்பது லட்சியம்.. இதனால் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் பணம் கட்டி படிக்க வைத்திருக்கிறார் செல்வராஜ். அதன் பலனாய் தேவதர்ஷினியும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டு +2 முடித்த மாணவி, தனியார் கோச்சிங் சென்டரில் சேர்ந்து நீட் தேர்வுக்கு படித்திருக்கிறார். ஆனால் அந்த ஆண்டு நீட் தேர்வில் போதிய மதிப்பெண் இல்லாததால் தேவதர்ஷினியால் தேர்வாக முடியவில்லை.
அதனை தொடர்ந்து இரண்டு வருடங்கள் எழுதியும் பலனில்லை... கடந்த முறை 476 மதிப்பெண்கள் எடுத்திருந்தும் சீட் கிடைக்கவில்லை.
அதன்பிறகு இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு கோச்சிங் சென்டரில் சேர்ந்து படித்துள்ளார்.
குடும்ப வறுமை வாட்டி வதைத்த போதும், லோன் போட்டு மகளின் கனவை நனவாக்க ஓடி இருக்கிறார் செல்வராஜ்.
இந்த சூழலில் தான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தேர்வு குறித்து பயம் இருப்பதாக தந்தையிடம் கூறி இருக்கிறார் தேவதர்ஷினி... என்ன நடந்தாலும் அப்பா நா இருக்கேன்டா நீ கவல படாதே என ட்ராகன் பட ஜார்ஜ் மரியம் போல ஆறுதலாய் பேசி அரவணைத்திருக்கிறார்.
ஆனாலும் தேவதர்ஷினி மன உளைச்சலிலேயே இருந்துள்ளார். இதனால் வெள்ளிக்கிழமை அன்று மகளை தன்னுடனே பேக்கரிக்கு அழைத்து சென்று படிக்க வைத்திருக்கிறார்.
நீண்ட நேரம் தந்தையின் கண்காணிப்பிலேயே படித்துக்கொண்டிருந்த தேவதர்ஷிணி, வீட்டிற்கு சென்று ஆடையை மாற்றிக்கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் அவர் மீண்டும் பேக்கரிக்கு திரும்பவில்லை...தேவதர்ஷினியின் செல்போன் அழைப்புக்கும் பதில் இல்லை....
இதனால் சந்தேகமடைந்த செல்வராஜ், நேராக வீட்டிற்கு சென்று பார்த்திருக்கிறார். அப்போது அவர் கண்ட காட்சி எந்த தந்தையும் காணக்கூடாத ஒன்று...
படுக்கையறையில் மகள் தூக்கில் தொங்கியபடி கிடந்திருக்கிறார்... கதறி துடித்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். பின் கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தேவதர்ஷினியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் இந்த முறையும் தோற்றால் என்ன ஆகும் என்ற தேர்வு பயத்தில் தான் தேவதர்ஷினி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
உண்மையில் தேர்வு பயத்தால் தான் தேவதர்ஷினி தற்கொலை செய்து கொண்டாரா? நீட் தேர்வு மையத்தில் ஏதேனும் அழுத்தம் கொடுத்தார்களா? அல்லது இதில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பதெல்லாம் போலீசாரின் தொடர் விசாரணைக்கு பிறகே தெரியவரும்.
இந்த நீட் மரணம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வினால் மாணவர்கள் பல விதங்களாக பாதிக்கப்படுவது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது.

