தமிழகமே பரபரப்பாக பேசும் ECR சம்பவத்தில் அடுத்த ட்விஸ்ட் - புதிய சிசிடிவியும்..பெண் தந்த விளக்கமும்
சென்னை அருகே நள்ளிரவில் காரில் சென்ற பெண்களை, இளைஞர்கள் சொகுசு காரில் துரத்திய சம்பவத்தில் புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்றுக்கொண்டிருந்த பெண்கள், சொகுசு கார் மீது உரசிவிட்டு நிற்காமல் சென்றதாகவும், இதனால் அந்த காரில் இருந்த இளைஞர்கள் பின்தொடர்ந்து வந்து பெண்களை துரத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளைஞர்கள் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு கார்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மிரட்டுவதும், பயத்தில் அந்த பெண்கள் முன்பும் பின்பும் சென்று வருவதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
சென்னை ஈ.சி.ஆர் சம்பவத்தில், இளைஞர்களின் காரில் தாங்கள் மோதியதாக கூறப்படுவது முற்றிலும் பொய் என, பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக தகவலில், தாங்கள் மது அருந்தவில்லை, குழந்தை மற்றும் குடும்பத்தோடு காரில் பயணித்ததாகவும் அந்த பெண் விளக்கம் அளித்துள்ளார். இளைஞர்களால் துரத்தப்பட்ட உடனேயே போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறியுள்ள அவர், காவல்துறையினர் தங்கள் வீட்டிற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதாக கூறியுள்ளார். இதனிடையே, குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், கார்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
