நோய் தொற்றினால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு - வாக்குவாதத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றபோது எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, மருத்துவரின் உடல், அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், காவல்துறையினரிடம் நள்ளிரவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்துக்கு பின், பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே, கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கீழ்ப்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்யக் கூடாது என கூறி ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கியதோடு, போலீசாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பெண்கள் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இறந்தவர்களின் உடல் மூலமாக கொரோனா வைரஸ் பரவாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
