சென்னை கேகே நகரை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர், காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில், தாம் சவுதி அரேபியாவில் பணியாற்றி, கடந்த 2019 மே மாதம் வீட்டுக்கு திரும்பியதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தனது மனைவிக்கும் திருநின்றவூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும் அதை பலமுறை தட்டி கேட்பதற்கு காவல் உதவி ஆய்வாளர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பூங்கா ஒன்றில் தனது மனைவியும் உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவரும் ஒன்றாக சந்தித்துக் கொண்ட போது அவர்களை பின் தொடர்ந்து புகைப்படம் எடுத்ததாகவும் இதனை பார்த்த உதவி ஆய்வாளர் கடுமையாக தாக்கியதாகவும், எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.