திருத்தேர் திருவிழா.... திடீரென நடந்த நிகழ்வால் பரபரப்பு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீ அய்யனார்-பூரணி புஷ்கலாம்பிகை மற்றும் கருப்பையா, மாரியம்மன், முருகன், செல்லியம்மன், விநாயகர், செம்மலையப்பா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்
ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்!
அதேபோல் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 8 நாட்களுக்கு முன்னர் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
திருவிழாவையொட்டி நாள்தோறும் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் திருவீதி விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தேனூர் கோவில் பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் திருவிழா இன்று காலை தொடங்கியது.
அழகிய மர வேலைபாடுகளுடன் கூடிய தேரில் வண்ண சீலைகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 30 அடி உயரம் கொண்ட மூன்று திருத்தேர்களில் மேற்கண்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்த வண்ணம் வீற்றிருந்தனர்.
மூன்று தேர்களையும் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்த நிலையில், ஸ்ரீ அய்யனார் பூரணி புஷ்கல அம்பிகை வீற்றிருந்த திருத்தேரின் அலங்காரப் பகுதி மட்டும் பக்கவாட்டில் திடீரென சாய்ந்து
விழுந்தது.
பாதி சாய்ந்த நிலையில் அலங்காரப் பகுதி தொங்கிய வழி இருந்ததால் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை!
இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது இதனை தொடர்ந்து, திருத்தேரில் சாய்ந்த அலங்காரப் பகுதியை பொதுமக்கள் உள்ளிட்ட பக்தர்கள் சீரமைத்து வருகின்றனர்.
கோவில் தேர் திருவிழாவின் போது, அலங்காரப் பகுதி மட்டும் சாய்ந்து விழுந்த சம்பவம் அப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
