

பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்பிற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஓராண்டிற்கு மேலாக ஆன்லைன் வழியாக கல்வி கற்க மாணவர்களும், ஆசிரியர்களும் பழகி விட்டதால், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வரவேண்டும் என்பதை ஏற்கமுடியாது என்றும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகளை தொடர அனுமதிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்,மாணவர்கள் மாஸ்க் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதையும் அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. தொடர்ந்து, நேரடி வகுப்புகளுக்கு வருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கை மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்டது.