குடும்பத்தையே துப்பாக்கியால் துளைத்த கொடூரம் - விழுப்புரத்தில் கோரம்
விழுப்புரம் அருகே குடும்ப தகராறில் துப்பாக்கியால் சுட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்த தென்னரசு என்பவர் ஆன்லைனில் ஏர் கன் (AIR GUN) எனப்படும் 4 இலகு ரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான தென்னரசு அவ்வப்போது தாய் மற்றும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் தென்னரசு போதையில் குடும்பத்தினருடன் சண்டையிட்டு ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தாய் பச்சையம்மாள், மனைவி லாவண்யா, சித்தப்பா மகனான தம்பி கார்த்திக் ஆகியோரை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் மூவரும் படுகாயமடைய உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக லாவண்யா மற்றும் கார்த்திக் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, தென்னரசை கைது செய்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
