Periyar Library Issue| பூகம்பமாக வெடித்த புத்தக விவகாரம்.. அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி

பூகம்பமாக வெடித்த புத்தக விவகாரம்.. அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி

தமிழக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பொது நூலகத்துறை அதிகாரிகளிடம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது. கோவை, திருச்சி, சேலம், கடலூர், நெல்லை உள்ளிட்ட மண்டல நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில், நீதிமன்ற உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு எதிராக நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அகல் விளக்கு பதிப்பகத்திடம் புத்தகங்கள் கொள்முதல் செய்ய பரிந்துரை செய்தது யார்? என பொது நூலகத்துறை இயக்குநரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நூலகத்துறை இயக்குநர், 112 உறுப்பினர்களைக் கொண்ட குழு புத்தகங்களைப் பரிந்துரைப்பதாக கூறினார். கோவை பெரியார் அறிவுலகத்திற்காக அகல் விளக்கு பதிப்பகத்திடம் இருந்து 1,700 புத்தகங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு, 17 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இதற்கிடையே, நவம்பர் 6-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம் அனுப்பியதாகவும், பதிப்பகத்தினர் மற்றும் எழுத்தாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. விசாரணையின்போது ஆஜரான கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி, ஒரு பதிப்பகத்திடம் இருந்து 17 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியது அதிகம் என்றும், தென்காசியில் 27 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கப்பட்டதாகத் தகவல் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, தவறு செய்தவர்களைக் கண்டறிய முடியவில்லையா என நீதிபதிகள் நூலக இயக்குநருக்கு கேள்வி எழுப்பினர். மேலும், அகல் விளக்கு பதிப்பகத்திடம் புத்தகங்கள் வாங்க நான்கு நிலைக் குழுக்களையும் தாண்டி பரிந்துரை செய்யப்பட்டதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

X