Biriyani | ஒன்று கூடிய முனியாண்டி விலாஸ் ஓனர்ஸ்.."இன்னைக்கு ஒரு புடி.."ஊரே கமகமக்க பிரியாணி விருந்து
மதுரையில் ஸ்ரீமுனியாண்டி விலாஸ் உணவக உரிமையாளர்கள் ஒன்று கூடி பிரியாணி திருவிழாவை கோலாகலமாக நடத்தினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே
வடக்கம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 91-வது ஆண்டு திருவிழாவையொட்டி, ஸ்ரீ முனியாண்டி விலாஸ் உணவக உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் வடக்கம்பட்டி கிராமத்தில் ஒன்றுகூடி சாமிக்கு நேர்த்திக்கடனாக ஆடு மற்றும் சேவல்களை செலுத்தி சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.
நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடுகள் மற்றும் சேவல்கள் முதலில் சாமிக்கு படையலிடப்பட்டன. பின்னர் 160-க்கும் மேற்பட்ட ஆடுகள், 100க்கும் மேற்பட்ட சேவல்களை பலியிட்டு, 2 ஆயிரத்து 500 கிலோ அரிசி கொண்டு, பிரியாணி சமைத்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
முன்னதாக, வடக்கம்பட்டி கிராமத்தில் ஒன்று கூடிய பெண் பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர், ஸ்ரீமுனியாண்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடத்துவதற்காக மலர் தட்டுகளை தலையில் சுமந்து மேள தாளங்கள் மற்றும் கரகாட்டத்துடன் ஊர்வமாகச் சென்றனர்.
