விளம்பர பலகையில் பைக் மோதி விபத்து - தலை துண்டாகி மாணவன் பலி
ஒகேனக்கலுக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர், ஓசூர் அருகே விபத்தில் சிக்கி தலை துண்டாகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த வருண் காடாபால். அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் ராஜஸ்தானை சேர்ந்த சிசுபால் சிங்.
இவர்கள் இருவரும் பெங்களூருவில் இருந்து ஒகேனக்கலுக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். நேற்றிரவு ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த விளம்பர பலகை மீது, இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வாகனத்தை ஓட்டி சென்ற வருண் காடாபால் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற மாணவர் சிசுபால் சிங் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற தேன்கனிக்கோட்டை போலீசார் மாணவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுற்றுலா சென்ற இளைஞர் தலை துண்டாகி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
