கலைஞர் பிறந்தநாள் கிரிக்கெட் விழா.. 274 அணிகள் பங்கேற்பு
கோவளம் பகுதியில், கலைஞர் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் பீச் கிரிக்கெட் போட்டியில், ஐந்தாவது சுற்று முடிவடைந்து, அடுத்தகட்ட ஆட்டமானது குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த கோவளம் ஊராட்சி மன்றத் தலைவர் சோபனா தங்கம் சுந்தர் ஏற்பாட்டில், கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு பீச் கிரிக்கெட் போட்டி கடந்த 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
274 அணிகள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், ஐந்து சுற்றுகளில் இதுவரை 263 ஆட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது சுற்று தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இறுதி சுற்றுக்கு தயாராகி உள்ள 9 அணிகளின் கேப்டன்களை வரவைத்து, குலுக்கல் முறையில் அடுத்த கட்ட ஆட்டம் குறித்து தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதலில் தேர்வு செய்யப்பட்ட கோவளம் Jolly Boys அணியும், முட்டுக்காடு டாக்டர் அம்பேத்கர் செலக்ட் அணியும் மோத உள்ளன. இதில் தோல்வியுற்ற அணி ஒன்பதாவது பரிசை தட்டி செல்லும்; வெற்றி பெற்ற அணி மீண்டும் இறுதி சுற்றில் விளையாடும்.
இரண்டாவதாக, கோவளம் Velong United அணியும் மாமல்லபுரம் CORE 11S அணியும் மோத உள்ளது. மேலும், இறுதி போட்டிகளை நேரலை செய்ய உள்ள நிலையில், பொதுமக்கள் கண்டு ரசிக்க எல்இடி திரையரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
