

தமிழக சட்டப்பேரவை தேர்தல்களில் மிகவும் ஆச்சர்யம் அளிக்கும் முடிவுகளை தந்த தேர்தல்களைப் பற்றி இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்
நாடு விடுதலையடைந்த ஆரம்ப கால தேர்தல்களில் காங்கிரஸ் மட்டுமே ஏக போகமாக இருந்து வந்தது. 1962ம் ஆண்டுக்கு பின், அந்த கட்சிக்கு சறுக்கல் ஆரம்பித்தது. தமிழகத்தில் மிகத் தீவிரமாகி வந்த இந்தி எதிர்ப்பு போராட்டம், மத்திய மற்றும் மாநிலத்தில் இருந்த காங்கிரஸ் அரசு மீதான கோபம், நேரு, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் அடுத்தடுத்த மரணங்களால் காங்கிரசில் குழப்பம் என கட்சியின் செல்வாக்கு சரிந்து வந்த தருணம். அது, 1967ம் ஆண்டு பேரவை தேர்தலில் எதிரொலித்தது.
ஏற்கனவே, 2 தேர்தல்களை சந்தித்திருந்த திமுக, அந்த தேர்தலில் மிக தீவிரமாக களம் இறங்கியது. அன்றைய சூப்பர் ஸ்டாரான எம்ஜிஆர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். பிரசாரத்துக்காக பிரத்யேக வேன் வசதியை அறிமுகம் செய்தது எம்ஜிஆர்தான். அதற்கு முன்பு வரையிலும் ஜீப் மட்டுமே பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதிக அளவில் பொதுக்கூட்டங்கள் தான் அன்றைய நாளின் பிரதான பிரசார களங்கள்.
காமராஜர், பக்தவத்சலம், பெரியார், ராஜாஜி, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஆதித்தனார், ம.பொ.சி. என பெரிய தலைவர்கள் பலரும் பங்கேற்ற தேர்தலும் அதுதான். பிரசார களத்தில் அனல் பறந்த நிலையில், காங்கிரஸ் சார்பாக பல ஆண்டுகள் முதல்வராக இருந்த ராஜாஜியே, 'வகுப்புவாத கட்சிகளை விட மிக மோசமான வகுப்புவாத கட்சி காங்கிரஸ்' என மிகக் கடுமையாக விமர்சித்தார்.