அதிரடியாக வந்த லஞ்ச ஒழிப்புத்துறை - துருவி துருவி நடந்த சோதனையில் சிக்கிய 1 லட்சம்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் லஞ்ச பணம் சிக்கியது;
நாகை பால்பண்ணைசேரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. நாள்தோறும் வாகன பதிவு, புதுப்பித்தல், ஒட்டுனர் உரிமம் போன்ற பல்வேறு பணிகள் காரணமாக எந்தநேரமும் பரபரப்பாக மக்கள் கூட்டத்துடன் இந்த அலுவலகம் காணப்படும்.
இந்த அலுவலகத்தில் பணம் கைமாறுவதாக இன்று நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவர்மன்
தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், அருள்பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அதிரடியாக நுழைந்தனர்.
தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் இடைத்தரகர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குள்ளே இருக்கச் செய்தனர். மேலும் வெளியாட்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல அலுவலகத்தின் வாயில் கதவு பூட்டப்பட்டு அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் எப்சி மற்றும் லைசென்ஸ் எடுக்க வந்த ஓட்டுநர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் அறை, பிரேக் இன்ஸ்பெக்டர் அறை, கணினி அறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வாகனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சல்லடை போட்டு சோதனை செய்தனர்.
இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
