Anna University | இந்த கல்வியாண்டு முதல் அமல் அண்ணா பல்கலை. அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழத்தில் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்கான கட்டணம் ரூ.30,000 அதிகரிப்பு அண்ணா பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரத்திற்கான, புதிய கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2026-27 கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டு, இந்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இணைப்பு அங்கீகாரத்திற்கான ஆய்வு மற்றும் செயலாக்கக் கட்டணம் 20 ஆயிரத்தில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு கூடுதல் கல்வித் திட்டத்திற்கும் செலுத்த வேண்டிய கட்டணம், 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ விரும்பினாலும் 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 89 தன்னாட்சி மற்றும் 368 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் செயல்பட்டு வருகின்றன. இணைப்பு அங்கீகாரத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, வருகிற 14ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் பொறியியல் கல்லூரிகள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
