பராமரிக்கப்படாத அண்ணா நூற்றாண்டு நூலகம்: தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது எப்போது?
கடந்த திமுக ஆட்சியின்போது சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. 15 ஏக்கர் பரப்பளவில், 9 தளங்களுடன் சகல வசதிகளுடன் அடங்கிய இந்நூலகம் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் தமிழகத்திற்கு அழகு சேர்க்கிறது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என பல பொது நல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளை எல்லாம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சரியாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து வசதிகளையும் உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
ஆனால் தற்போது வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அவலங்கள் தீரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எந்த ஒரு தளத்திலும் கழிவறைகளில் தண்ணீர் கிடையாது உள்ளே நுழைந்தாலே துர்நாற்றம் வீசக் கூடிய அளவிற்கு கழிப்பறைகள் நிலை இருக்கின்றன. போட்டித் தேர்வுக்கு படிக்க வரும் இளைஞர்கள் நூலகத்தில் போதிய அடிப்படை வசதி இல்லாததை கண்டு வேதனை தெரிவிக்கின்றனர். நூலகத்தின் ஒரு பகுதியில் கிட்டத்தட்ட 1000 பேர் அமரக்கூடிய வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திறந்தவெளி அரங்கம், நூலகம் திறந்தது முதல் 8 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வரவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
