தனியாக வசிக்கும் மூதாட்டியின் வீடு புகுந்து ஆறு சவரன் நகை, இரண்டு லட்சம் ரொக்கம் கொள்ளை
தனது சொச்ச வாழ்விற்கான நீண்ட கால சேமிப்பை சில நொடிகளில் பறித்துச் சென்று விட்டதாக மூதாட்டி வேதனை பேட்டி.
சிசிடிவி பதிவு உதவியுடன் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணாநகர் கிழக்கு வ.உ.சி காலனியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 77). இவரது கணவர் சுப்பிரமணி உடல்நல குறைவால் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் என ஆறு பேருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். உடனிருந்த திரைப்படதுறையில் பணியாற்றிய ஒரு மகனும் சமீபத்தில் இறந்து விட, மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வருகிறார். மூதாட்டி லட்சுமி வீட்டின் கீழ் தளத்தை வடமாநில தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விட்டுவிட்டு முதல் தளத்தில் வசிக்கிறார்.
துடைப்பம் வியாபாரமும் செய்து கிடைக்கும் காசை வைத்து வாழ்க்கையை ஒட்டி வரும் மூதாட்டி, தனது வாழ் நாள் சேமிப்பாக 6 சவரன் நகையும், சிறுக சிறுக சேர்த்த 2 லட்ச ரூபாய் பணமும் வீட்டில் வைத்துள்ளார். இந்த நிலையில் காஞ்சிபுரம் சென்று விட்டு நேற்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.
தினமும் இரண்டு முறை பணம் நகை இருக்கும் பெட்டியை திறந்து பார்க்கும் மூதாட்டி, வீட்டிற்கு வந்ததும் வழக்கம்போல் ட்ரங்க் பெட்டியை திறந்து பார்த்தபோது இரண்டு லட்சம் ரொக்கம், ஆறு சவரன் நகை ஆகியவை பத்திரமாக இருந்தன. பயணக் களைப்பில் இருந்த மூதாட்டி லட்சுமி , காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளார்.ஏழரை மணிக்கு எழுந்து பார்த்தபோது டிரங்க் பெட்டி திறந்து கிடந்தது. அதிலிருந்த 6 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் மூதாட்டி லட்சுமி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கணவர் தனது மகனை இழந்து தனியாக வசிக்கும் மூதாட்டி, தனது வாழ்நாள் சேமிப்பாக வைத்திருந்த நகை, பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர் என வேதனை தெரிவித்தார்
