Amavasya | கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள் - நிரம்பி வழிந்த நீர்நிலைகள்.. இறங்கிய வாலண்டியர்ஸ்

x

தை அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

நதியை பாதுகாக்கும் வகையில், பொதுமக்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் கவர்களை தன்னார்வலர்கள் பெற்றுக்கொண்டு காகித கவர்களை வழங்கினர்.

பாபநாசம் கோவில் முன்பு உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு மாவினால் செய்யப்பட்ட பிண்டங்கள் மற்றும் எள், தண்ணீர் இறைத்து தர்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை காவிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சங்கமேஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்பாளை தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் கோயிலுக்குள் இருக்கும் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்