அதிரடி ஆபரேஷன்.. சிக்கிய `டார்க்’ நெட்வொர்க் - ஆந்திராவில் அலறவிட்ட TN போலீஸ்
கடலூருக்கு ரயில் மூலம் கஞ்சா சப்ளை செய்த கும்பலை ஆந்திரா சென்று கும்பலை பிடித்த தமிழ்நாடு காவல்துறை
கடலூருக்கு ரயில் மூலம் கஞ்சா சப்ளை செய்த கும்பலை, ஆந்திரா வரை சென்று காவல்துறை கைது செய்துள்ளது. கஞ்சா வியாபாரிகளுக்கு போலீஸ் கொடுத்த ஷாக் ட்ரீட் குறித்து பார்ப்போம்....
தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கடலூர் போலீசாரும் அதிரடியாக செயல்பட்டு கஞ்சா சப்ளை கும்பலை தட்டி தூக்கியுள்ளனர்.
கடலூரில் கடந்த சில தினங்களுக்கு முன் கைதான வசந்த் என்பவர், தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரிகள் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்
அதன் அடிப்படையில், கஞ்சா நெட்வொர்க்கை பிடிக்க ஆந்திரா மாநிலம் அனகாபள்ளிக்கு விரைந்த கடலூர் போலீசார், வியாபாரிகள் போல் நடித்து, அந்த கும்பலை பிடித்துள்ளனர்.
ஆந்திராவிலிருந்து ரயிலில் கடத்தி வரப்படும் கஞ்சா மூட்டைகள், ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்படுவதும், அந்த இடத்தில் இருக்கும் நபர்கள் கஞ்சா மூட்டையை கைப்பற்றி விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் என்பதும் விரைவில் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 69 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா கடத்தல் தொடர்பாக 12 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஆந்திரா வரை சென்று அதிரடி காட்டி கஞ்சா நெட்வொர்க்கை பிடித்த கடலூர் தனிப்படை போலீசாரின் துணிகர செயல், பாராட்டுக்குரியதே...
