பெட்ரோல் பங்க் மேனேஜர் மரணத்தில் திடுக் திருப்பம்... கொலையை மறைக்க விபத்து நாடகம்... காரணமானவரை கார் ஏற்றிக் கொன்ற பயங்கரம்...

பெட்ரோல் பங்க் மேனேஜர் மரணத்தில் திடுக் திருப்பம்...  கொலையை மறைக்க விபத்து நாடகம்...  காரணமானவரை கார் ஏற்றிக் கொன்ற பயங்கரம்...
x

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் இருந்து கடம்பூர் செல்லும் நெடுஞ்சாலை அது.

அவ்வழியாக சென்றவர்கள் சத்திரப்பட்டி அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் ஒருவர், சம்பவ இடத்திலயே இறந்துக்கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கயத்தார் போலீசார் இறந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய இரு வாகனங்களும் யாருடையது என விசாரித்த போது அதில் splender பைக்குக்கு சொந்தக்காரர் சங்கிலி பாண்டி என்பதும், அவர்தான் விபத்தில் உயிரிழந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

29 வயதான சங்கிலி பாண்டி தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அடுத்துள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வந்திருக்கிறார் சங்கிலி பாண்டி.

இந்நிலையில் தான் சம்பவத்தன்று பைக்கில் வேலைக்கு சென்ற போது எதிர்பாராத இந்த விபத்து நடந்திருக்கிறது.

எல்லோரும் சங்கிலி பாண்டிக்கு நடந்தது சாலை விபத்தென நினைத்திருந்த போது காவல்துறையினருக்கு மட்டும் அவர் தலையிலிருந்த வெட்டுக்காயம் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, விபத்தை ஏற்படுத்திய கார் உரிமையாளர் யாரென்று தெரியாதது அந்த சந்தேகத்தை மேலும் வலுபெற செய்திருக்கிறது.

சங்கிலி பாண்டிக்கு ஊருக்குள் ஏதேனும் எதிரிகள் உள்ளார்களா ? என விசாரித்திருக்கிறார்கள்.

அப்போது அனைவரும் முனுமுனுத்த ஒரு பெயர் சண்முகராஜ்.

சங்கிலி பாண்டிக்கும் அதே பகுதியை சேர்ந்த சண்முகராஜ் என்பவருக்கும் கடந்த ஒரு வருடமாகவே பிரச்சனை இருந்திருக்கிறது.

அதற்கு காரணம் சண்முகராஜின் மனைவி.

ஆம், சங்கிலி பாண்டிக்கும் சண்முகராஜின் மனைவிக்கும் நட்பு ரீதியிலான பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் தகாத உறவாக உருவெடுத்ததாக சொல்லப்படுகிறது..

இந்த விவகாரத்தை கேள்விப்பட்டு மன நிம்மதியை இழந்த சண்முகராஜ், சங்கிலி பாண்டியையும் அவரது மனைவியையும் கண்டித்து வந்திருக்கிறார்.

இருவரும் நண்பர்களாகவே பிரிந்திருக்கிறார்கள்.

ஆனால், அதன்பிறகு சண்முகராஜுக்குள் புகுந்த சந்தேக சாத்தான் அவர் மனைவியை நிம்மதியாக வாழவிடவில்லை.

ஒருக்கட்டத்தில் கணவரின் டார்ச்சர் தாங்க முடியாமலும், அவமானத்தாலும் சண்முகராஜின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

மனைவியின் இந்த திடீர் தற்கொலை சண்முகராஜின் மனதில் ரணமாக மாறியிருக்கிறது. தன்னுடைய வாழ்கை சங்கிலி பாண்டியால் சீரழிந்து விட்டதென நாள் முழுக்க அதையே நினைத்து மனதிற்குள் புழுங்கி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் மனைவி இல்லாமல் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என அவரின் நண்பரான மகாராஜாவிடம் அழுது புலம்பியிருக்கிறார் சண்முகராஜ்.

இதற்கு ஒரே வழி சங்கிலி பாண்டியை கொன்று விடுவது தான் என மகாராஜா உசுப்பேற்ற சண்முகராஜின் ஆழ்மனமும் அதையே விரும்பி இருக்கிறது.

இருவரும் சேர்ந்து பலநாட்களாக திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.

கொலை செய்துவிட்டு போலீஸிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க முதலில் திருட்டு காருக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

சங்கிலி பாண்டியை கார் ஏற்றி கொன்றுவிட்டு விபத்துபோல சித்தரிக்க முயல்வது தான் அவர்களின் திட்டமாக இருந்துள்ளது.

அதன்படி, சம்பவம் நடந்தன்று கயத்தார் செல்லும் சாலை வழியாக சங்கிலி பாண்டி டூவிலரில் சென்றுக்கொண்டு இருந்தப்போது அவரை சண்முகாஜும், மகாராஜாவும் காரில் ரகசியமாக பின் தொடர்ந்திருக்கிறார்கள். ஒரு ஆள் அரவமற்ற இடம் சிக்கியதும் ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்தியவர்கள் சங்கிலி பாண்டியை இடித்து தள்ளி இருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் ஏற்படுத்திய விபத்தில் சங்கிலி பாண்டி உயிரிழக்கவில்லை. இவனை இப்படியே விட்டுவைத்தால் உயிர் பிழைத்து போலீஸில் சிக்க வைத்துவிடுவான் என மகாராஜா மீண்டும் க்ரிம்னலாக யோசிக்க. உடனே காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து சங்கிலி பாண்டியின் தலையில் ஒரே போடாக போட்டுவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர்.

நடந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சண்முகராஜையும் அவரது கூட்டாளியான மகாராஜாவையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்