தமிழகத்தையே உலுக்கிய பயங்கரம் - யார் இந்த கொடூர பாவிகள் என கேட்ட கேள்விக்கு விடை?
தமிழகத்தையே உலுக்கிய ஈரோடு, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவத்தில், 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், பல்லடம் மூவர் கொலையையும் தாங்களே செய்ததாக அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள தோட்டத்து வீடுகளில் வயதானவர்களை கொடூரமாக கொன்று, நகைகளை கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
குறிப்பாக பல்லடம் அருகே தந்தை, தாய், மகன் என 3 பேர் கொல்லப்பட்டதும், சிவகிரி அருகே வயதான தம்பதி கட்டையால் அடித்துக்கொல்லப்பட்டதும் கொடுத்த பயத்தில் அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்தனர்.
சிவகிரி தம்பதி படுகொலை வழக்கில் 12 சிறப்பு குழுக்கள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், ஆச்சியப்பன், மாதேஷ்வரன், ரமேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ராமசாமி - பாக்கியம் தம்பதியை கொன்று அவர்களிடம் இருந்து பத்தரை சவரன் தங்க நகையை திருடிச்சென்றதை ஒப்புக்கொண்ட மூவரும் அளித்து மற்றொரு வாக்குமூலம், போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கடந்த 2024-ல் திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம், சேமலைக்கவுண்டன்பாளையத்தில் வசித்துவந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோரை கொலை செய்து அவர்களிடமிருந்து 56 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்ததும் நாங்கள் தான் என அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
