ரேடாரில் சிக்கிய 5 அதிகாரிகள் - விஜிலென்ஸ் கொடுத்த பேரதிர்ச்சி
ரூ.17 கோடி ஊழல் புகாரில் திண்டுக்கல் மாநகராட்சியில் 5 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு
திண்டுக்கல் மாநகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில், அப்போதைய ஆணையர் உட்பட 5 அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
திண்டுக்கல் மாநகராட்சி வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில் வருவாய், முதலீடு, குடிநீர் வழங்கல் நிதி ஆகியவற்றிலிருந்து 17 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதில், அப்போதைய மாநகராட்சி ஆணையர் மனோகர், மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன் ஆகியோர் சுமார் 18 லட்சம் ரூபாய் சொத்து வரி முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.
மேலும், சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வாயிலாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு குப்பை தொட்டிகள் வாங்கியதற்கான மதிப்பை உயர்த்திக் காட்டியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்பேரில், முன்னாள் மாநகராட்சி ஆணையர் மனோகர், முன்னாள் மாநகராட்சி துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன் உள்ளிட்ட 5 அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர் நடராஜன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
