23 வயது பெண் ஐடி ஊழியர் தூக்கிட்டு த*கொலை - மெக்கானிக் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
பிறந்த நாள் அன்றே ஒரு இளம் ஐடி பெண் ஊழியர் தற்கொலை செய்து உயிரை மாய்த்திருக்கிறார். காதல் விவகாரத்தில் நடந்த விபரீதம் இது...
சென்னை நெற்குன்றம் செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் தீபிகா. 23 வயதான இவர் அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஜிம் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
தந்தையை இழந்த தீபிகா, தாய் மற்றும் அண்ணனுடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் ஞாயிறு அன்று தீபிகாவின் பிறந்த நாள் என்பதால் வாட்ஸ்அப் மெசேஜ், போன்கால் என வாழ்த்துகள் வந்து குவிந்திருக்கிறது. ஆனால் அதுதான் அவரது கடைசி நாள் என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை.
அன்றைய தினம் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யப்போவதாக கூறிவிட்டு, அறைக்குள் சென்றிருக்கிறார் தீபிகா. மதியம் சென்ற மகள், பொழுது சாய்ந்தும் கூட வெளியே வரவில்லை என்பதால் தீபிகாவின் தாய், கதவை தட்டி இருக்கிறார். ஆனாலும் கதவு திறக்கப்பட வில்லை.
உடனே அறையின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்திருக்கிறார். அப்போது தான் அவருக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. உள்ளே தீபிகா தூக்கில் தொங்கியபடி கிடந்திருக்கிறார். உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த கோயம்பேடு போலீசார், கதவை உடைத்து தீபிகாவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
அப்போது தான் காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் தீபிகா இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது.
தீபிகாவும் எதிர்வீட்டில் வசித்து வந்த ஏசி மெக்கானிக்கான அருள் என்ற இளைஞரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள். காதலிக்கும் போது தீபிகாவிடம் இருந்து 4 லட்சம் பணம், 4 சவரன் நகைகள் என கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி இருக்கிறார் அருள்.
இதனை திருப்பி கேட்டபோது காதலர்களுக்குள் சண்டையும் தகராறும் வெடித்திருக்கிறது. இது குறித்து நடந்த சண்டையில் கடந்த ஆண்டு தீபிகாவை தாக்கி இருக்கிறார் அருள். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
ஆனால் காதல் ஜோடி இருவரும் பழசை எல்லாம் மறந்து மீண்டும் காதலித்து வந்திருக்கிறார்கள். ஆனாலும் பணப்பிரச்சனை அவர்களுக்குள் பேரிடியாய் அமைந்திருக்கிறது.
காதலன் என்பதால் தீபிகா பேன் கார்டு, ஏடிஎம் கார்டு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அருளுக்கு கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்தி தீபிகாவிற்கு தெரியாமல் சுமார் ஒரு லட்சம் வரை லோன் ஆப்பில் கடன் பெற்றிருக்கிறார் அருள்.
ஒரு மாதத்தில் தீபிகாவின் வங்கி கணக்கில் இருந்து இ எம் ஐ பிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோது தான் காதலன் அருள் வாங்கிய ஒரு லட்சம் கடன் தீபிகாவுக்கு தெரிந்திருக்கிறது.
கடன் குறித்து அருளிடம் தீபிகா கேட்க, மீண்டும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. பிறந்த நாளான சம்பவத்தன்றும் கூட பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. காதலர்கள் இருவரும் போனிலேயே சண்டையிட்டிருக்கிறார்கள்.
ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த தீபிகா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி, அருளுக்கு whatsapp மூலமாக வியூ ஒன்ஸில் புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார்.
இதைக் கண்ட அருள், தீபிகாவின் தோழிக்கு தகவல் தெரிவித்து, தடுக்க முயன்றுள்ளார். ஆனாலும் பயனில்லை... அதற்குள் தீபிகா தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்.
மேலும் தீபிகா இறப்பதற்கு முன்னதாக அவரது இன்ஸ்டாகிராம் ஐடியில் தனது காதலனுடன் வேறொரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் தீபிகாவின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். தீபிகாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள காதலன் அருளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அருள் கைது செய்யப்பட்ட பிறகே தீபிகாவின் மரணத்தில் உள்ள பின்னணி வெளிவரும்.
தீபிகாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த காதலன் அருளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முழுமையான விசாரணைக்கு பிறகே தீபிகாவின் மரணத்தில் உள்ள பின்னணி வெளிவரும்.
