அடுத்தடுத்து 17 ஆடுகள் பலி - தடுப்பூசி காரணமா?
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் ஆடுகள் வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.
சுமார் 40 ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மாலையில் வீட்டிற்கு வருவது வழக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருசநாடு கால்நடை மருத்துவ குழுவினர் பாண்டியம்மாள் வளர்க்கும் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
தடுப்பூசி செலுத்திய மறுநாள் ஒரு ஆடும் அதற்கு அடுத்தபடியாக மற்றொரு ஆடும் அடுத்தடுத்து உயிரிழந்தது.
இந்த நிலையில் இன்று காலை பாண்டியம்மாள் வழக்கம்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். அ
ப்போது அடுத்தடுத்து 15 ஆடுகள் திடீரென நடுங்கியபடி மயங்கி விழுந்து உயிரிழந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாண்டியம்மாள் உடனடியாக கால்நடைத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இறந்த ஆடுகளை சுடுகாட்டிற்கு எடுத்து வந்து ஒவ்வொரு ஆடாக பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் பெரிய அளவில் தோண்டப்பட்ட பள்ளத்தில் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். ஆடுகள் இறப்பினால் தங்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டதாக கதறிய பாதிக்கப்பட்டவர்கள், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அறிக்கை விடுத்தனர். மேலும் ஆடுகள் இறப்பிற்கு தடுப்பூசி செலுத்தியதே காரணம் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் கூறினர். ஆடுகளின் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என கால்நடைத்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஒரே நாளில் 17 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் வருசநாடு பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
