ரூ.150 கோடி வரி குறைப்பு மோசடி-மண்டல தலைவர்களின் அறைகளுக்கு பூட்டு

x

ரூ.150 கோடி வரி குறைப்பு மோசடி...மண்டல தலைவர்களின் அறைகளுக்கு பூட்டு

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வரி குறைப்பு மோசடி விவகாரத்தில், மண்டல தலைவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், மண்டல அலுவலகங்கள் பூட்டப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டிடங்களுக்கான சொத்து வரி நிர்ணயத்தில் குறைப்பு செய்து 150 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா மற்றும் சுவிதா ஆகியோர் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். அதேபோல், நகரமைப்பு நிலைக் குழுத் தலைவர் மூவேந்திரன் மற்றும் வரிவிதிப்பு நிலைக் குழுத் தலைவர் விஜயலட்சுமி ஆகியோரும் ராஜினாமா செய்த நிலையில் மாநகராட்சி ஆணையர் சித்ராவிஜயன், ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து மண்டல தலைவர்களின் அறைகள் மூடப்பட்டு சாவிகள் மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மண்டல தலைவர்களிடம் இருந்த லெட்டர் பேடுகள் கைப்பற்றப்பட்டன.

இதனிடையே, முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என கருதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வாய்ப்புள்ளதால் மேயரின் நேர்முக உதவியாளர் பொன்மணி மாற்றம் செய்யப்பட்டு புதிய நேர்முக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்