சேலத்தில் 10 வயது சிறுவன் வெட்டிக்கொலை, தாயின் கை துண்டிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் 10 வயது சிறுவனை வெட்டிக்கொலை செய்துவிட்டு, கொலையாளி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது....

ஓமலூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் பிரிந்து சென்றதால், அவரது மனைவி தனது தந்தையின் கரும்பு ஆலையில் உள்ள ரூமில், தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்..

இந்நிலையில் அந்த பெண் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஷோரூமில் வேலை பார்த்தபோது, அங்கு மேலாளராக இருந்த வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக சக்திவேலிடம் பேசுவதை அந்த பெண் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், நள்ளிரவில் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். "உன்னை ஒருமுறை பார்த்துவிட்டுச் செல்கிறேன்" எனக்கூறி கதவைத் திறக்கச் செய்த சக்திவேல், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.....

இதில் அந்த பெண்ணின் ஒரு கை துண்டானது. தடுக்க வந்த 10 வயது மகன் கிஷாந்த்தையும் சக்திவேல் கொடூரமாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.....

கை துண்டான பெண்ணை, உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்...

இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை தேடி வந்தனர்... இந்நிலையில், வெள்ளாளப்பட்டி பகுதியில், அவர் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்... இது குறித்து ஓமலூர் மற்றும் கருப்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com