Suryavanshi| ``வீடியோ கேம்ல கூட இந்த மரண அடி அடிக்க முடியாது’’ - உலகையே அலறவிட்ட சூர்யவன்ஷி
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் வெறும் 52 பந்துகளில் இரட்டை சதம் விளாசி 15 வயது இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளார். 'பேபி பாஸ்' சூர்யவன்ஷியின் சூறாவளி ஆட்டத்தால் 250 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி வெறும் 15 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 249 ரன்கள் எடுத்தது. 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி வாணவேடிக்கை காட்டத் தொடங்கினார். களமிறங்கியது முதலே பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த அவர், வெறும் 16 பந்துகளில் அரைசதத்தை கடந்து தனது அதிரடிக்கு அச்சாரம் போட்டார். அடுத்த 12 பந்துகளிலேயே, அதாவது 28 பந்துகளில் சதத்தை எட்டி மிரட்டினார். அதன்பிறகு அவர் ஆடியது முழுக்க முழுக்க ருத்ரதாண்டவம்தான்... 40 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தவர், கிரிக்கெட் வரலாற்றில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் வெறும் 52 பந்துகளில் இரட்டை சதத்தை பதிவு செய்து புதிய உலக சாதனை படைத்தார். மொத்தம் 53 பந்துகளைச் சந்தித்த சூர்யவன்ஷி, 204 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் வியக்க வைக்கும் ஆச்சரியம் என்னவென்றால், அவர் எடுத்த 204 ரன்களில் 196 ரன்கள் பவுண்டரிகள் மூலமாகவே வந்தவை... 28 இமாலய சிக்சர்களையும், 7 பவுண்டரிகளையும் விளாசிய அவர், ஆடுகளத்தில் ஓடி எடுத்தது வெறும் 8 ரன்கள் மட்டுமே. சூர்யவன்ஷியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸால், 50 ஓவர்களில் அடிக்க வேண்டிய 250 ரன்கள் இலக்கை இந்திய அணி வெறும் 15-வது ஓவரிலேயே எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த பந்துகளில் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சூர்யவன்ஷிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
