

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 7-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, மெல்போர்னில் இன்று பிற்பகல்12.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணியுடன், முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி மோதுகிறது. இதனையொட்டி, ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய மகளிர் அணிக்கு, பிரதமர் மோடி, பிசிசிஐ தலைவர் கங்குலி உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, வெற்றிபெறும் அணிக்கு வழங்கப்படும் சாம்பியன் கோப்பையை, பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி அறிமுகம் செய்தார். அவருடன் இந்திய அணி வீராங்கனைகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சர்வதேச மகளிர் தினத்தில் நடைபெறும் இந்த போட்டியின் துவக்க நிகழ்ச்சியில், கேட்டி பெர்ரியின் பாடல் அரங்கேற உள்ளது. மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நடைபெறும் இந்த போட்டியை காண 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.