முடிவுக்கு வந்தது சிஎஸ்கே- பிளெமிங்கின் 18 ஆண்டுகால கூட்டணி

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் , அணியுடனான தனது நீண்டகாலப் பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், சிஎஸ்கே மற்றும் பிளமிங்கின் 18 ஆண்டுகால பயணம் குறித்து பார்க்கலாம்...

மஞ்சள் நிற உடையும்... கையில் ஒரு நோட்டுப் புத்தகமும்... முகத்தில் எப்போதும் மாறாத அந்தத் தீர்க்கமான அமைதியும்... இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘டக்-அவுட்’ (Dug-out) பகுதியில் இந்த காட்சியை ரசிகர்கள் பார்க்க முடியாது...

ஆம்...சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசைக்க முடியாத தூணாகவும்... தலைமை பயிற்சியாளராகவும் தனது நீண்ட கால பயணத்தை நிறைவு செய்திருக்கிறார், நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங்...

தோனி இல்லாத சிஎஸ்கே-வை கற்பனை செய்ய முடியாத ரசிகர்களுக்கு, பிளெமிங் இல்லாத சிஎஸ்கே-வும் ஒரு ஏமாற்றம் தான்‌...

2008ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் தொடக்க ஆட்டக்காரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காலடி எடுத்து வைத்த ஸ்டீபன் பிளெமிங்... ஆனால், அவருடைய திறமையைப் பார்த்து அடுத்த ஆண்டே சென்னை அணி நிர்வாகம் அவரைப் பயிற்சியாளராக மாற்றியது..

அன்று ஆரம்பித்த பந்தம், சென்னை அணி மட்டுமில்லாமல் அதன் வெளிநாட்டு அணிகளான 'ஜோபர்க்' மற்றும் 'டெக்சாஸ்' சூப்பர் கிங்ஸ் வரை தொடர்ந்தது....

தோனி மற்றும் பிளெமிங் கூட்டணியின் அந்த அன்பான 'டிரெஸ்ஸிங் ரூம்' கலாச்சாரம் தான் சிஎஸ்கே-வின் பலம்... இவர்களின் வழிகாட்டுதலால் தான் சென்னை அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தது.

சென்னை ரசிகர்களுக்கும் பிளெமிங்கிற்கும் இடையே ஒரு அலாதியான பாசம் இருந்தது... மேட்ச் எவ்வளவு விறுவிறுப்பாக இருந்தாலும், பதற்றப்படாமல் அமைதியாகத் தனது நோட்டில் ஏதோ எழுதிக் கொண்டே இருப்பார் பிளெமிங்...

"அவர் நோட்டில் எழுதிவிட்டார், இனி சிஎஸ்கே ஜெயித்துவிடும்" என்று ரசிகர்கள் மீம்கள் போட்டு அவரைக் கொண்டாடினார்கள்...

சேப்பாக்கம் மைதானத்தில் தோனிக்குக் கிடைக்கும் அதே அன்பை, ஒரு வெளிநாட்டுப் பயிற்சியாளராக இருந்தாலும் பிளெமிங்கிற்கும் சென்னை மக்கள் அள்ளித் தந்தார்கள்...

எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு உண்டு என்பது போல, கடந்த சில ஐபிஎல் சீசன்களில் சென்னை அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து, பிளே-ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறவில்லை. இந்தத் தொடர் தோல்விகள்தான் இன்று பிளெமிங் விலக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

"அணி அடுத்த கட்டத்திற்குப் போக இதுவே சரியான நேரம்" என பிளெமிங்கும் சிஎஸ்கே நிர்வாகமும் பேசி, சுமுகமாகப் பிரிந்துள்ளனர்.

"கிரிக்கெட்டில் 18 வருடங்கள் என்பது ஒரு ஆயுள் காலம் போன்றது... சென்னை மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்" என உருக்கமாக கூறி விடை பெற்றிருக்கிறார், பிளெமிங்....

தற்போது காலியாக உள்ள அந்தப் பதவிக்கு, கடந்த இரண்டு சீசன்களாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி பெயர் பலமாக அடிபடுகிறது...

பிளெமிங் சென்னை அணியை விட்டுப் பிரிந்தாலும், அவர் ரசிகர்கள் நெஞ்சில் விதைத்த 'மஞ்சள் பாசம்' என்றும் மறையாது...

​"தேங்க்யூ பிளெமிங்" - உங்கள் நினைவுகள் எப்போதும் எங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் சுற்றிக்கொண்டே இருக்கும் என சிலாகிக்கின்றனர் ரசிகர்கள்...

X

Thanthi TV
www.thanthitv.com