Gill | Ind vs Eng Test | அத்தனை கணிப்புகளும் தவிடுபொடி - தோனி ஸ்டைலில் கில் சாட்டையடி
விமர்சனங்களை தகர்த்தெறிந்த சுப்மன் கில்
பரபரப்பாக நடந்த ஓவல் டெஸ்ட்டில் த்ரில் வெற்றியை ருசித்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது இந்தியா... 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா கடந்து வந்த பாதையையும் இங்கிலாந்தில் இந்தியா எப்படி ஆதிக்கம் செலுத்தியது என்பதையும் இந்த தொகுப்பில் காண்போம்....
ரோகித் இல்லை... கோலி இல்லை... அஸ்வின் இல்லை... இவர்கள் இல்லாத இந்திய அணி இங்கிலாந்தில் மண்ணைத்தான் கவ்வப்போகிறது.... ஒயிட்வாஷ் ஆகாமல் தப்பித்தால் அதிர்ஷ்டம்....
தொடர் தொடங்குவதற்கு முன்பு சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணியை இப்படித்தான் பலரும் விமர்சித்து இருந்தனர்.
லீட்ஸில் முதல் போட்டி.... முழுமையாக பேட்டிங்கிற்கு சாதகமாக அமைய 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து முன்னிலைப் பெற்றது....
தொடரை தோல்வியுடன் தொடங்கினாலும் பர்மிங்கமில் நடந்த 2வது டெஸ்ட்டில் மீண்டெழுந்தது இந்தியா....
முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம்... 2வது இன்னிங்ஸில் சதம் என வியக்க வைத்தார் இந்திய கேப்டன் கில்...
இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 336 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய தோல்வியைத்தான் அடைந்தது.
புகழ்பெற்ற லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு நிகராக சளைக்காமல் இந்தியா போராடிப் பார்த்தது. முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் 387 ரன்கள் எடுக்க, 2வது இன்னிங்சில் 193 ரன்கள் இலக்கை நோக்கி பயணித்த இந்தியா, 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது., இங்கிலாந்து மீண்டும் முன்னிலை கண்டது.
மான்செஸ்டர் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் தடுமாறினாலும் 2வது இன்னிங்சில் ராகுல், கில், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என நால்வரும் நங்கூரம் பாய்ச்சி நிற்க, டிரா செய்தது இந்தியா....
ஓவலில் இறுதிப்போட்டி... பும்ரா இல்லை... காயத்தால் ரிஷப் பண்ட்டும் இல்லை...
இக்கட்டான சூழலில் விளையாடிய இந்தியா, 374 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இங்கிலாந்து வீரர்கள் bazball அணுகுமுறையைக் கையாண்டனர்.
ஹாரி ப்ரூக்கும் ரூட்டும் சதம் விளாச, போட்டி முழுவதும் இங்கிலாந்து பக்கம் நகர்வதுபோல் இருந்தது.
ஆனால் நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசி session-ல் (செஷனில்) இந்திய பவுலர்கள் மாயம் செய்ய, முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதி நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் தேவைப்பட இந்திய பவுலர்கள் தீரத்துடன் போராடி, இங்கிலாந்து பேட்டர்களை அழுத்தம் அடையச் செய்தனர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்த இந்தியா தொடரையும் சமன் செய்தது....
தொடரை இழந்துவிடுவார்கள் என்ற கணிப்புகளை இந்திய வீரர்கள் பொய்யாக்கியது மட்டுமின்றி, அவர்களது சொந்த மண்ணில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளனர்; நட்சத்திர வீரர்கள் இல்லாமலும் தங்களால் ஜொலிக்க முடியும் என நிரூபித்துக்காட்டியுள்ளனர்.
பேட்டிங்கில் கில், ராகுல், பண்ட், ஜெய்ஸ்வால்... பவுலிங்கில் சிராஜ், பும்ரா, பிரஷீத், ஆகாஷ் தீப்... ஆல்ரவுண்டராக ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என ஓர் அணியாக இந்த தொடரில் பல இடங்களில் இந்தியா ஸ்கோர் செய்திருக்கிறது.
25 நாட்கள் நடந்த இந்த நீண்ட தொடரில் சிறு சிறு பிழைகளை சரி செய்திருந்தால் தொடரே இந்தியாவின் பக்கம் வந்திருக்கும்...
குறிப்பாக கேப்டனாக தன் மீதான சந்தேகங்களுக்கு தக்க பதில் தந்திருக்கிறார் சுப்மன் கில்... டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த அத்தியாயம் கில் தலைமையில் ஆரம்பமாகி இருக்கிறது
