சூறைக்காற்றில் மேற்கூரை சரிந்து விபத்து
சூறைக்காற்றில் மேற்கூரை சரிந்து விபத்து
சூறைக்காற்றால் திமுக பொதுக்குழுவிற்காக அமைக்கப்பட்ட மேற்கூரை சரிந்து விபத்து
தகரத்திலான மேற்கூரை சரிந்ததில் அங்கிருந்த மாடு அடியில் சிக்கியது
தகரத்தின் அடியில் சிக்கிய மாட்டை துரிதமாக செயல்பட்டு மீட்ட பொதுமக்கள்
மதுரையில் பலத்த காற்று வீசியதில் திமுக பொதுக்குழு கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடைக்கான மேற்கூரைகள் பறந்துவிழுந்து விபத்து- பறந்துசென்ற மேற்கூரை மாடு ஒன்றின் மீது விழுந்த நிலையில் பசுமாடு கிரேன் இயந்திரம் மூலமாக மீட்பு
மேற்கூரைக்குள் மாடு சிக்கிய நிலையில் மாட்டை மீட்க ஒன்றுசேர்ந்து உதவுவதற்காக கைகோர்த்து மேற்கூரையை தூக்க முயன்று பரிதவித்த பொதுமக்கள் - நல்வாய்ப்பாக உயிருடன் மீட்கப்பட்ட பசுமாடு
உலக காற்று நாளான ஜூன் -15ஆம் தேதியான இன்று மதுரை மாவட்ட முழுவதிலும் காலை முதல் பலத்த காற்று வீசிவருகிறது. இதன் காரணமாக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பழமையான மரங்கள் முறிந்து விழுந்தன மேலும் சாலைகளில் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் காற்றில் சாய்ந்து விழுந்துள்ளன. மாநகரின் பிரதான பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்து கட்டிடங்கள் மீது விழுந்ததோடு மட்டுமின்றி மின் கம்பிகள் அறிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.
இதனிடையே மதுரை மாநகர் வளர்நகர் பகுதியில் கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்திற்கான மேடைக்காக உருவாக்கப்பட்ட மேற்கூரைகள் தற்போது வரை அகற்றும் பணிகள் நடைபெற்றுவருகிறது
இந்நிலையில் பலத்த காற்று காரணமாக பிரம்மாண்டமான மேற்கூரை திடீரென காற்றில் அடித்து பறந்து சென்றது அருகில் உள்ள பேக்கரி கட்டிடத்தை தாண்டி மேற்கூரை விழுந்த நிலையில் நல்வாய்ப்பாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை,
இந்நிலையில் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பசு மாடு ஒன்றின் மீது மேற்கூரை விழுந்ததால் அதில் சிக்கி கத்தியபடி உயிருக்கு போராடியது. அப்போது அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி மேற்கூரையை கைகளால் தூக்க முயல்வதற்காக தொடர்ந்து போராடினர்
ஆனால் பெரிய அளவிலான மேற்கூரை என்பதால் தூக்க முடியாத நிலையில் உடனடியாக அருகில் உள்ள கிரேன் வரவழைக்கப்பட்டு கிரேன் இயந்திர மூலமாக மேற்கூரை அகற்றப்பட்ட பின்பாக பசு மாடு மீட்கப்பட்டு உரிமையாளர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்
வளர் நகர் பகுதியில் உள்ள பிரதான சாலையில் திமுக பொதுக்குழு கூட்டத்திற்காக போடப்பட்ட மேற்கூரைகள் தற்போது வரை அகற்றப்படாத நிலையில் மதுரை மாட்டுத்தாவணி - மேலூர் செல்லும் பிரதான சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மேற்கூரை மீண்டும் பறந்து விழுந்து விடும் என்ற அச்சத்தோடு வாகனங்களை இயக்கி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது
மேலும் காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால் மீண்டும் மேற்கூரை பறந்து விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பகுதியில் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் அடைத்துவிட்டு சென்றுள்ளனர்
பொதுக்குழு கூட்டம் நடைபெற்று 15 நாட்களான நிலையில் தற்போது வரை மேடை அகற்றப்படாமல் இருப்பதன் காரணமாக பலத்த காற்று வீசி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

