`ஆமாம்! மிரட்டல் தான்..'' அதிமுக-பாஜக கூட்டணி - முரசொலி கடும் விமர்சனம்
அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆமாம்! மிரட்டல்தான்! என்ற தலைப்பில் முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில்,
‘2026 ஆம் ஆண்டு மட்டுமல்ல, 2031 ஆம் ஆண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதாகவும், இத்தகைய சூழலில் தான் பழனிசாமியின் உறவினர்களுக்குச் சொந்தமான 26 இடங்களில் ரெய்டு நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த எடப்பாடியின் உறவினர் என்று செய்திகள் வெளியான நிலையில், பழனிசாமி, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததாகவும்,
அவர் மிரட்டப்பட்டது அம்பலம் ஆனதாகவும் முரசொலி நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் ஊழல் நடக்கிறது என்று பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது சொன்னவர் அமித்ஷா....இன்று அவர் எப்படி பழனிசாமியுடன் கைகோர்த்தார்?... பா.ஜ.க. தனியாக நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது என்பதை அமித்ஷா அறிவார்... தன்னைக் காக்க பழனிசாமியும், தனது கட்சியைக் காக்க அமித்ஷாவும் அமைத்துள்ள சுயநல – ஊழல் கூட்டணிதான் அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணி என்றும் முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
