உச்சநீதிமன்றம் கையில் எடுத்த சிறப்பு சட்டப்பிரிவு 142 - பின்னணி என்ன?
ஆளுநர் ஆர்.என்.ரவி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கையில் எடுத்த சிறப்பு சட்டப்பிரிவு 142-ன் பின்னணி என்ன?
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கையில் எடுத்த சிறப்பு சட்டப்பிரிவு குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது.
நீதிமன்றத்திற்கான, சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி 10 மசோதாக்களும் அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இப்படி உச்சநீதிமன்றம் கையில் எடுத்த சிறப்பு அதிகாரம் கவனம் பெற்றிருக்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 142-வது விதி உச்ச நீதிமன்றத்துக்கு சில அதிகாரங்களை வழங்குகிறது.
அதன்படி எந்தவொரு வழக்கிலும் முழுமையான நீதியை வழங்குவதற்கு தேவையான எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கலாம்.
நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவும், அந்த உத்தரவுகளை அவமதித்தால் தண்டிக்கவும் உச்சநீதிமன்றத்திற்கு அரசியலமைப்பு சட்டத்தின் 142 விதி அதிகாரங்களை வழங்குகிறது.
பல முக்கிய வழக்குகளில் சட்டப்பிரிவு 142-விதியை பிரமாஸ்திரமாக பயன்படுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
போபால் விஷவாயு கசிவு வழக்கில் 1989 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 470 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக வழங்க அதிரடியாக உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 142-வது விதியை பயன்படுத்தியது.
முழுமையான நீதியை வழங்க நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களை கூட மீறலாம் என சொல்லும் அளவிற்கு சென்றதாக என பார்க்கப்பட்டது.
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விசாரணையின் போது, கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அதிரடியாக 1993 முதல் 2010 வரை மத்திய அரசு செய்த 214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்தது. அப்போதும் 142-வது விதியை பயன்படுத்தியது.
2016 ஆம் ஆண்டு 142-வது விதியை பயன்படுத்தி நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளையொட்டி 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
2019 ஆம் ஆண்டு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய போதும் உச்சநீதிமன்றம் 142-வது விதியை பயன்படுத்தியது.
அதாவது இஸ்லாமியர்கள் மசூதி அமைப்பதற்காக 5 ஏக்கர் நிலத்தை வழங்கவும், கோயில் கட்டும் அறக்கட்டளையில் நிர்மோஹி அகாடாவை இணைக்கவும் விதியை பயன்படுத்தியது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்யவும் உச்சநீதிமன்றம் 142-வது விதியை பயன்படுத்தியது.
2024 ஜனவரியில் சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றிபெற செய்ய தில்லாங்கடி வேலை செய்யப்பட்ட விவகாரத்தில், தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்தது.
இப்போது தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கிலும் இதே சட்டப்பிரிவை கையில் எடுத்து, 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியதாக தீர்ப்பளித்துள்ளது.
