ஒரே நம்பரில் பல வாக்காளர்கள்.. பிற மாநில நபர்களை ஓட்டு போட வைக்க திட்டமா? - உண்மை என்ன?
ஒரே நம்பரில் பல வாக்காளர்கள்.. பிற மாநில நபர்களை ஓட்டு போட வைக்க திட்டமா? பாஜக, தேர்தல் ஆணையம் மீது விழுந்த சந்தேக நிழல் - உண்மை என்ன?
பல வாக்காளர்களுக்கு ஒரே அடையாள அட்டை எண் சர்ச்சை விவகாரத்தில் நடப்பது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு
மேற்கு வங்கத்தில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் தேர்தல் ஆணையத்தின் உதவியோடு பாஜக மற்ற மாநிலங்களிலிருந்து போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கிறது என குற்றம் சாட்டுகிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
பிற மாநிலத்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தனியார் நிறுவனங்களை பாஜக ஈடுபடுத்தி உள்ளதாகவும், டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா மற்றும் குஜராத்தில் பாஜக போலி வாக்காளர்களை பதிவு செய்து தேர்தல்களில் வெற்றி பெற்றது எனவும் குற்றம் சாட்டினார் மம்தா பானர்ஜி.
அரியானா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண்ணோடு ஒத்துப்போகிறது எனவும் குறிப்பிட்டார்.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது EPIC எண் என்பது ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட 10 இலக்க வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகும். ஆனால் பல வாக்காளர்களுக்கு ஒரே அடையாள அட்டை எண்ணே வழங்கப்பட்டு இருக்கிறது என்பதே இப்போதைய குற்றச்சாட்டாக இருக்கிறது.
ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்ணோடு பல்வேறு வாக்காளர் அடையாள அட்டைகள் வெவ்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் உலாவ தொடங்கின. குறிப்பாக அரியானா, மேற்கு வங்கத்தில் ஒரே பெயரில் 2 வாக்காளர் அடையாள அடைகள் ஒரே அடையாள அட்டை எண்ணை கொண்டிருந்தது விமர்சனங்களோடு இணையதளத்தில் பரவியது.
இப்படி ஒரே எண்ணில் பல்வேறு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது, தெரியாமல் செய்த பிழையா? இல்லை தேர்தல்களில் முறைகேடு செய்ய நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட மோசடியா? என கேள்வியை எழுப்பியது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. நடுநிலையான தேர்தல் ஆணையம் பாஜகவின் தேர்தல் மோசடி துறையாக மாறியுள்ளது எனவும் சாடியது.
இந்த சூழலில் வாக்காளர் அடையாள அட்டை எண் சர்ச்சைக்கு விளக்கம் அளித்திருக்கும் தேர்தல் ஆணையம், எந்தவொரு வாக்காளர்களும் தங்கள் மாநிலத்தில் உள்ள அந்தந்த தொகுதியில் அவர்களது வாக்குச்சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும், வேறு எங்கும் வாக்களிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
ஒரு வாக்காளரின் தகுதியானது அவர்களின் அடையாள அட்டை எண்ணால் தீர்மானிக்கப்படுவதில்லை என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்கள் உள்ளது என்பதாலே, போலி அடையாள அட்டை என குறிப்பிடுவது சாத்தியமில்லாத ஒன்று எனவும் ஒவ்வொரு வாக்காளரும் தனிப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பெறுவதை உறுதி செய்வதாக ஆணையம் கூறியுள்ளது.