Udhayanidhi| உதயநிதி மீது பாய்ந்த `அந்த’ பகீர் பிரிவு - `BNS 192’ என்ன சொல்கிறது?
உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்கு தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்ட பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது ஒன்பது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா BNS, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. திட்டமிட்டு குற்றவியல் சதியில் ஈடுபட்டதற்காக பாரதிய நியாய சன்ஹிதா BNS பிரிவு 61-ன், பெண்மையை இழிவுபடுத்தும் வகையிலும், இரட்டைப் பொருளிலும் பேசியதாக BNS 79 பிரிவின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது. பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் உரையாற்றியதாக BNS 192 பிரிவின் கீழும், சமூகப் பிரிவினரிடையே மோதலையும், பகைமையையும் வளர்க்கும் வகையில் பேசியதாக BNS 196 என்ற ஜாமினில் வர முடியாத பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூடியிருந்த பொதுக்கூட்ட மேடையில் நாகரிகமற்ற ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக BNS 296(b) பிரிவின் கீழும் முதலமைச்சர் உள்ளிட்ட நபர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறி BNS 351(2) பிரிவின் கீழும் உதயநிதி மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது... பொது அமைதியைக் கெடுக்கும் உள்நோக்கத்தோடு பிறரை அவமதித்துப் பேசிய குற்றச்சாட்டின் கீழ் BNS 352 பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவெளியில் பெண்ணைக் கொச்சைப்படுத்திப் பேசித் துன்புறுத்தல் விளைவித்ததாகத் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4-ன் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய பேச்சின் வீடியோக்கள் இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் பரவக் காரணமாக இருந்ததற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67-ன் கீழும் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
