2026 தேர்தல்: உதயநிதி VS விஜய்?குறிவைக்கும் தவெக - வியூகம் அமைக்கும் திமுக - இளைஞர்கள் யார் பக்கம்?
விஜய் அரசியல் வருகையால் இளம் வாக்காளர்களை கவர திமுக போடும் புது வியூகம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டன.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாதக, தாவெக என 2026 தேர்தல் பிரசார களம் திக்குமுக்காடும் என்றே பார்க்கப்படுகிறது. ஆளும் திமுக வெற்றியை வசமாக்க வியூகங்களை வகுத்து வருகிறது.
குறிப்பாக அரசியலுக்கு வந்திருக்கும் நடிகர் விஜயின் வியூகத்தை வீழ்த்தும் வகையில் காய் நகர்த்துகிறது.
இதில் இளைஞர்களையும், மகளிரையும் மையமாக வைத்து வியூகம் போடுகிறது திமுக.
2019-ல் உதயநிதி இளைஞர் அணி செயலாளர் ஆன பிறகு இல்லம் தோறும் இளைஞரணி பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
திமுகவில் 30 லட்சம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார் உதயநிதி. இதற்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்திருப்பதாகவும், திமுகவில் இளைஞர்கள் சேர்வது அதிகரித்து இருப்பதாகவும் கட்சி தலைவர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.
இளைஞர்களையும், மகளிரையும் கவரும் வகையில் ஆட்சியிலும், கட்சியிலும் சில முன்னெடுப்புகளை திமுக மேற்கொள்ள இருப்பதாகவும், மாவட்ட அளவில் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணிக்கு பொறுப்பு கொடுப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இளம் பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.
திமுகவில் மாவட்ட செயலாளர் எண்ணிக்கை 76 ஆக உயர்த்தப்பட்ட போது, இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருப்பூர் மேயர் தினேஷுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
இதுபோல சில மாவட்டங்களில் இளைஞர் அணி, மகளிர் அணிக்கு பொறுப்புகளை வழங்க திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது.
இப்போது 76 ஆக இருக்கும் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 80 ஆக உயர்த்தவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசை கண்டித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இடம்பெற்ற தலைவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, அனைவரது பெயரிலும் அறிக்கையை வெளியிடும் யுக்தியையும் கையாள்கிறது திமுக.
சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது 2026 சட்டப்பேரவை தேர்தல் குறித்து இருவரும் ஆலோசித்து உள்ளனர்.
இதுபோல்... வரவிருக்கும் நாட்களில் கூட்டணி கட்சி தலைவர்களை எல்லாம் சந்தித்து தேர்தல் வியூகங்களை வகுக்க திமுக திட்டமிட்டு வருவதாக அறிவாலயம் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
