அமளிக்கு இடையே தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமளிக்கு இடையே தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
Published on

அரசின் அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத் தன்மை இருப்பதை தகவல் அறியும் உரிமை சட்டம் உறுதி செய்தது. இதில், மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு, தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, தகவல் ஆணையர்களின் நியமனம், பதவிக்காலம், விதிமுறைகள், ஊதியம் உள்ளிட்டவற்றை மத்திய அரசே நிர்ணயிக்கும் வகையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த திருத்தமானது தகவல் அறியும் உரிமை சட்டத்தையும், தகவல் ஆணையங்களின் அதிகாரத்தையு​ம் நீர்த்துப் போகசெய்யும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்தநிலையில், தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே, கடந்த 22ந் தேதி, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதாவை, நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானம் தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம், தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியுள்ளதால், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com