"மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்" சி.வி.கணேசன் வெளியிட்ட அற்புதமான அறிவிப்பு
ஆன்லைன் மூலம் பொருட்களை விநியோகிக்கும் ஊழியர்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்க 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என, அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்தார். சட்டப்பேரவையில், மானிய கோரிக்கையின்போது பதிலளித்துப் பேசிய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தனியார் இணையதளங்கள் வாயிலாக பொருட்கள் விநியோகம் மற்றும் சேவைகள் வழங்கும் தொழிலாளர்களின், இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 2 ஆயிரம் பேருக்கு, 4 கோடி ரூபாய் செலவில் மின்சார ஸ்கூட்டர் வாங்குவதற்கு 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒன்றரை லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டுத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதுடன், களப்பணிகளுக்கிடையே ஓய்வு எடுக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வுக்கூடங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சி.வி.கணேசன் குறிப்பிட்டார்.
