``குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறார்.. அம்பேத்கரை அசிங்கப்படுத்துகிறார்’’ - ஆளுநரை தாக்கிய முரசொலி
அரசியல் சட்டப்படி பதவியேற்ற ஆளுநர், சட்டத்தை மீறி தனது விருப்பத்துக்கு திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசிக் கொண்டிருப்பதாக, முரசொலி நாளிதழில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் வெளிவந்துள்ள கட்டுரையில், 1967-ம் ஆண்டு தி.மு.க. அரசு அமைந்த 3வது மாதத்தில் திருவள்ளுவரின் ஓவியம் அரசு அங்கீகாரம் பெற்ற ஓவியமாக அரசாணை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கி.பி.எட்டாம் நூற்றாண்டில் பரிமேலழகர் தொடங்கி இந்த ஆண்டில் ஆர்.என்.ரவி வரை நூற்றாண்டுதோறும் பலரது படையெடுப்புகளால் வீழ்த்த முடியாத வீரியம் திருக்குறளுக்கு மட்டுமே உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரைச் சொல்வதற்கு ஆளுநர் கூச்சப்படுகிறார்... வள்ளுவருக்கு காவி அடிக்கிறார்... சனாதன வகுப்பு எடுக்கிறார்... குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறார்... அம்பேத்கரை அசிங்கப்படுத்துகிறார்... அரசியல் சட்டமே குறைபாடானது என்கிறார்....
இவ்வளவு பெரிய மேதையாக இருக்கும் ரவியை இந்திய குடியரசுத் தலைவர் ஆக்கலாம்.. ஐ.நா.சபைக்கே அழைத்துச் செல்லலாம்.
அங்கும் காவி உடையில் செல்லவும்.... ஆங்கிலேய உடை, ஆங்கில மொழியை அவர் விடுத்து அவர் சொல்வதற்கு அவரே முன்மாதிரியாக நடந்துகாட்ட வேண்டும். அதற்கு ஒரு தேதி குறிக்கவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
