

சென்னை அண்ணா நகரில் உள்ள திருநாவுக்கரசர் இல்லத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, தனது மகளின் திருமண அழைப்பிதழை அளிப்பதற்காக ரஜினிகாந்த் அங்கு வந்தார். இதையடுத்து, 3 பேரும் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பேசினர். அப்போது, மூவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசியதாக கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, திருநாவுக்கரசரை ரஜினி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவில் ரஜினி காந்தை சந்தித்ததால்தான் திருநாவுக்கரசரின் பதவி பறிக்கப்பட்டது என செய்திகள் வெளியான நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு:
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து, மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.
அப்போது மகளின் திருமணத்திற்கு வருமாறு, ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. முன்னதாக, போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மகளின் திருமணத்திற்கு, திருநாவுக்கரசர் உறுதுணையாக இருந்ததாகவும் எனவே அவருக்கு முதல் அழைப்பிதழை வைத்ததாக, கூறினார்.