Sonam Wangchuk |தடுத்து நிறுத்தப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள்..சோனம் வாங்சுக்கின் மனைவி கேட்ட கேள்வி
Sonam Wangchuk |தடுத்து நிறுத்தப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள்..சோனம் வாங்சுக்கின் மனைவி கேட்ட கேள்வி குருகிராம் மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கைச் சந்திக்கக் காவல்துறையினர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் 55 பேர் தாங்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அவருடைய மனைவி கீதாஞ்சலி ஆங்மோவிடம் வழங்கினர். ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ஆர்ஜேடி, சிபிஎம், ஜேஎம்எம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 எம்பிக்கள் அடங்கிய குழு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனம் வாங்சுக்கைச் சந்திக்க நேரில் சென்றது. இந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருக்குச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியது சர்வாதிகாரப் போக்கு என ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு 55 எம்பிக்கள் கையெழுத்திட்டுத் தயாரித்த கடிதத்தை வாங்சுக்கிடம் நேரடியாக வழங்க முடியாததால், அதனை அவருடைய மனைவி கீதாஞ்சலியிடம் எம்பிக்கள் ஒப்படைத்தனர். "சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தைக் கைவிடக் கூடாது என்று மத்திய அரசு விரும்புகிறதா?" என எதிர்க்கட்சி எம்பிக்கள் தடுக்கப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து அவருடைய மனைவி கீதாஞ்சலி ஆங்மோ கேள்வி எழுப்பினார்.நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக 25 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் சோனம் வாங்சுக், போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என அரசு உறுதியளித்தால் மட்டுமே உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
